- லாப நோக்கில் வீரிய ஒட்டுரக விதைகளையும், செயற்கை உரம் மற்றும் பூச்சி மருந்து முதலானவற்றைப் பயன்படுத்தி தற்போது காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதை உண்பவருக்கு, பக்க விளைவுகள் ஏற்படும் நிலையுள்ளது. இதனால், இயற்கை முறையில் கத்திரி சாகுபடி செய்துவருகிறேன்.
- செவந்தம்பட்டி கத்தரி: பாரம்பரிய கத்திரி ரகங்களுள் ஒன்றான செவந்தம்பட்டி ரகத்தில் 30 நாளான நாற்றுகளை காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்திலிருந்து வாங்கிவந்து தோட்டத்தில் நிகழாண்டு நடவு செய்தேன்.
- இதற்காக 60 நாள்களுக்கு முன்னதாகவே நிலத்தை உழுது அதில் பசுந்தாள் உரங்களுள் ஒன்றான சணப்பு விதைகளை விதைத்து, 45 நாள்களில் மண்ணுடன் உழவு செய்தோம். இதனால், மண்ணில் பல ஆண்டுகளாக உரம் மற்றும் ரசாயன பூச்சி மருந்துகளால் ஏற்பட்டிருந்த கார அமில தன்மைகளை இது மாற்றியது. மேலும் மண்ணுக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளையும் கொடுப்பதனால் அடுத்தடுத்த பருவ சாகுபடி நல்ல மகசூலை தரும்.
- இதன்பிறகு மண்ணை இரண்டுமுறை நன்கு உழவு செய்து மண்ணை காயவைத்து அதன்பிறகு 5 அடி பட்டத்தின் அகலமும், 4 அடி செடிக்கு செடி அகலமும் வைத்து குழிவெட்டி, அதில் நன்கு மக்கிய தொழு உரங்களை குழிகளில் இட்டு அதன் பிறகு அதில் தேர்வு செய்த நாற்றுகளை நடவு செய்தேன்.
- பின்னர் மூன்று நாள்கள் காலை மற்றும் மூன்று நாள்கள் மாலையிலும் தண்ணீர் ஊற்றி பின்னர் பருவத்தில் கொத்தி, பார்கள் அமைத்து, முதல் பூச்சி விரட்டியாக 3 எ கரைசல் எனப்படும் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் முதலியவற்றை நன்கு இடித்து அதில் பசுவின் கோமியத்தை கலந்து தெளித்தோம். மேல் உரமாக ஈயம் கரைசலை பயன்படுத்தினோம்.
- இதன் பிறகு செடிகளுக்கு இலைவழி உரமாக பஞ்சகவ்யம், பூச்சி விரட்டிகளாக 3 ஏ கரைசல், 7 இலை கரைசல் முதலியவற்றை பயன்படுத்தினோம். தற்போது 90 நாள்கள் கடந்த நிலையில் ஏறக்குறைய 6 அடி உயரம் வளர்ந்து செடி நல்ல மகசூலை தந்துகொண்டிருக்கிறது. சுமார் 20 செண்ட் நிலப் பரப்பில் பயிர் செய்திருக்கும் கத்திரி கடந்த 60 நாள்களில் 1,265 கிலோ பறிக்கப்பட்டுள்ளன.
- இந்த செடிகளில் மேலும் 8, 9 மாதங்கள் வரை காய்ப்பு இருக்கும். இது இயற்கை முறையிலானது என்பதால் இந்த மகசூல் தொடரும். நல்ல லாபம் கிடைப்பது தெரிகிறது. உற்பத்தி அனைத்தும் காரைக்கால் பகுதி சந்தைக்கே விற்பனைக்காக அனுப்பப்படுகிறது என்றார்.
நன்றி: தினமணி
No comments:
Post a Comment