Monday, 6 March 2017

வறட்சியிலிருந்து தென்னையை காக்க எளிய வழிமுறைகள்..!



பலமாவட்டத்தில் இந்தாண்டு பருவ மழை முற்றிலும் பொய்த்துப்போய், பாசனம் செய்ய வழியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். பாசன ஆதாரங்கள் வற்றிப்போய், கடும் வறட்சி தலை துாக்கியுள்ளது.
மழையின்மையால், அடிக்கும் வெயிலும், நிலவும் உஷ்ணமும், மனிதர்களை மட்டுமல்லாது, விவசாய பயிர்களையும் கடுமையாக பாதிக்கிறது.
தென்னை விவசாயிகள், வறட்சியை எப்படி எதிர்கொண்டு, தென்னை பயிர்களை பராமரிப்பது என்பது தெரிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு கீழ்கண்ட முறைகளை கடைபிடிக்கலாம்
மண் மூடாக்கு
வறட்சி காலத்தில் பெரிய பிரச்னையாக இருப்பது, பாசனம் செய்யும் நீர், பயிர்களுக்கு முழுமையாக கிடைக்காமல், வெப்பத்தில் ஆவியாகி விடுவது தான். இதை தவிர்க்க, தென்னை மரத்துக்கு பாசனம் செய்யும் பாத்தியில் மூடாக்கு அமைக்க வேண்டும்.
பாத்திக்கு, 15 தென்னை ஓலைகள், தேங்காய் மட்டைகள் அல்லது தென்னை நார் கழிவுகளை பரப்பி, சூரிய ஒளி படுவதை தடுப்பதன் மூலம், பாசனம் செய்யும் நீர் ஆவியாவதையும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்து, வறட்சியின் பாதிப்பை குறைக்கலாம்.
பாசன மேலாண்மை
மரங்கள் பட்டுப்போவதை தடுக்க, சொட்டு நீர்ப் பாசனம் என்றால், ஒரு மரத்திற்கு, ஒரு நாளைக்கு குறைந்தது, 65 லிட்டரும், வாய்க்கால் பாசனம் என்றால், ஒரு மரத்திற்கு, ஆறு நாட்களுக்கு ஒரு முறை, 410 லிட்டரும் பாசனம் செய்வது நல்லது.
ரசாயன உரங்கள் வேண்டாம்
வெயில் தாக்கம் அதிகமுள்ள இந்த மாதங்களில், யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட எந்த ரசாயன உரத்தையும் தென்னைகளுக்கு அளிக்க வேண்டாம். அதற்கு பதில், ஆடு, மாட்டு எரு, தொழு உரங்களை அளிக்கலாம். இயற்கை, உயிர் உரங்களை அளிப்பதே நல்லது.
குரும்பை உதிர்தல்
பாசன பற்றாக்குறை மற்றும் நிலவும் வெப்பத்தின் காரணமாக, பரவலாக காணப்படும் பிரச்னைகளுள் ஒன்று, குரும்பை உதிர்வது. அதிகளவில் குரும்பைகள் உதிர்வதால், உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும். குரும்பை உதிர, வெயில், பாசன பற்றாக்குறை மட்டுமின்றி, நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையும் காரணமாக உள்ளது. விவசாயிகள் தங்கள் தோப்பில் குரும்பை உதிர்வை கண்டறிந்தால், தங்கள் பகுதி வேளாண் அலுவலர்களை அணுகி, ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும்.
நீண்ட காலம் பராமரித்து வளர்க்கும் தென்னையை, வறட்சி பாதிப்புகளில் இருந்து கவனமாக பாதுகாத்தால் மட்டுமே, அடுத்து வரும் ஆண்டுகளில் முழுமையான உற்பத்தியை பெற முடியும். இதை கவனத்தில் கொண்டு விவசாயிகள் செயல்பட வேண்டும்.

மண்பானை பாசனம்..!



தனது பண்ணையில் ஏராளமான மரங்களை நட்டு வைத்துள்ள கண்ணன், அவற்றுக்கு மண் பானை பாசனம் அமைத்துள்ளார். இதைப்பற்றிப் பேசிய கண்ணன், “வேலி ஓரமா இருக்கிற மரங்களுக்கு அடிக்கடி பாசனம் செய்ய முடியாது. அதனால் ஒவ்வொரு செடி பக்கத்திலேயும் அஞ்சு லிட்டர் கொள்ளளவுள்ள மண்பானையைப் புதைத்து வைத்திருக்கிறோம்.. பானையை புதைப்பதற்கு முன்னால், பானைக்கு அடிப்பக்கம் பக்கவாட்டில் சின்னதாக ஒரு துளை போட்டுவிடுவோம். அதோட வாய்ப்பகுதி மட்டும் கொஞ்சம் சாய்வா இருக்கிற மாதிரி புதைத்துவிடுவோம்.
வாய்க்காலில் தண்ணீர் பாய்ச்சும்போது, பானைக்குள்ளேயும் தண்ணீர் நிறைந்துவிடும். நிலத்தில் ஈரம் காயக்காயப் பானையில இருக்கிறத் தண்ணீர் சொட்டுச் சொட்டா இறங்கிட்டே இருக்கும். இதனால, செடியோட வேர்ப்பகுதி எப்பவும் ஈரப்பதத்தோட இருக்கும். பானைத் தண்ணி முழுமையா இறங்க 15 நாட்கள் ஆகும். அதற்குள் அடுத்த பாசனம் கொடுத்துவிடுவோம். இதனால் வருஷம் முழுக்கச் செடிகளுக்குப் போதுமான தண்ணீர் கிடைத்து, செடிகளோட வளர்ச்சி நன்றாக இருக்கிறது” என்றார்.
நன்றி
பசுமை விகடன்

Saturday, 18 February 2017

அவரையில் அதிக லாபம்!

தண்ணீர் பற்றாக்குறையை ஈடு செய்து, அவரையைப் பயிர் செய்து லாபம் ஈட்டும் வழிமுறைகளை கூறும், SCAD வேளாண் அறிவியல் மையத்தின் தலைமை அதிகாரிகளான பாபு மற்றும் அமலி கூறுகிறார்:

 Courtesy: Dinamalar

  • துாத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில், பெரும்பாலும் மானாவாரிப் பயிராக, பருத்தி, சூரியகாந்தி, மக்காச்சோளம், பயறு வகைகள் மற்றும் சிறு தானியங்களை, விவசாயிகள் பயிரிடுவர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நிலவும் வறட்சி மற்றும் பருவ நிலை மாற்றங்களால், குறைந்த தண்ணீரே தேவைப்படும் மானாவாரிப் பயிர்களைக் கூட, பயிர் செய்ய முடியாமல் தவித்தனர்.
  • அதற்குத் தீர்வு காணும் விதமாக, கடும் வறட்சி மற்றும் குறைந்த நீரில் வளரக்கூடிய குறுகிய காலத்தில் அறுவடைக்குத் தயாராகும் அவரைக்காயை பயிர் செய்யலாம் எனக் கூறினோம்.
  • அதன்படி, ‘கோ14’ என்ற அவரை வகையை மாதிரியாக, ஐந்து விவசாயிகளின் நிலத்தில் பயிர் செய்யுமாறு, கடந்த ஆண்டு அறிவுறுத்தினோம். அதன் மூலம் விவசாயிகள், குறைந்த செலவில் அதிக லாபத்தைப் பெற்றனர்.நல்ல மகசூல் எடுத்ததைத் தொடர்ந்து, இதே முறையைப் பின்பற்றி மற்ற விவசாயிகளும் எதிர்வரும் பருவத்தில், அவரை பயிர் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
  • இதற்கு, நிலத்தை நன்றாக உழுது எரு அடித்து, மீண்டும் உழுது கொள்ள வேண்டும்.
  • பின், குறு செடி வகையான, ‘கோ14’ ரக அவரை விதைகளை வரிக்கு, 45 செ.மீ., இடைவெளியில் பார் அமைத்து செடிக்கு செடி, 30 செ.மீ., இடைவெளியில் விதைக்க வேண்டும்.
  • விதைப்புக்கு முன், ரைசோபியம் கலவையில் விதை நேர்த்தி செய்த பின், விதைக்க வேண்டும்.
  • அவரையில் இருக்கும் பெரிய பிரச்னையே, காய் துளைப்பான் நோய் தான். இதை கட்டுப்படுத்த, வேப்ப எண்ணெயை தெளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • விதைத்த, 52வது நாளில் இருந்து காய்கள் பறிக்கத் துவங்கலாம். தொடர்ச்சியாக, 90வது நாள் வரை நான்கு நாட்களுக்கு ஒருமுறை என, காய்களை பறிக்கலாம். 20 ஆயிரம் ரூபாய் செலவிடுவதன் மூலம், 90 நாட்களில் அதிகபட்சமாக, 90 ஆயிரம் ரூபாய் வரை வருமானம்  ஈட்டலாம்.
  • அவரைக்காய், நம் சமையலில் முக்கியப் பயிராக இருப்பதால், சந்தையில் இதற்கு எப்போதுமே, ‘டிமாண்ட்’ உள்ளது. ஒரு கிலோ அவரைக்காய், 22 ரூபாய் முதல், 38 ரூபாய் வரை சந்தையில் விற்பனை ஆகிறது
நன்றி: தினமலர்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சீனித்துளசி!

சீனித்துளசி… சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரம்! இந்த மூலிகைக்கு `மிட்டாய் இலை’ (Candy Leaf), `இனிப்பு இலை’ (Sweet Leaf), `சர்...