Friday, 10 August 2018

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சீனித்துளசி!



சீனித்துளசி… சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரம்! இந்த மூலிகைக்கு `மிட்டாய் இலை’ (Candy Leaf), `இனிப்பு இலை’ (Sweet Leaf), `சர்க்கரை இலை’ (Sugar Leaf) என வேறு பல பெயர்களும் உள்ளன. இதில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside), ரெபாடையோசைடு (Rebaudioside) போன்ற வேதிப்பொருள்கள்தான் இதன் இனிப்புக்கு முக்கியக் காரணங்கள்.

சீனித்துளசி
இதில், கரும்புச் சர்க்கரையைவிட 30 மடங்கு இனிப்புச்சுவை அதிகம். ஆனாலும், குறைந்த அளவு சர்க்கரை, மாவுச்சத்துகளைக் கொண்ட பொருள்களே இதில் உள்ளன. குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இனிப்புச்சுவை கொண்டது; சர்க்கரை (சீனி), வெல்லத்தைவிட பலமடங்கு இனிப்புச்சுவை உடையது. ஆனாலும் இதைக்கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருள்களால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது; சர்க்கரைநோய் ஏற்படவும் வாய்ப்பிலை. இதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது என்பதுதான் இதன் சிறப்பு.
`சர்க்கரை நோயாளிகள் இனிப்புப் பொருள்களைச் சாப்பிடக் கூடாது’ என்று மருத்துவர்கள் வலியுறுத்தும் சூழலில், சீனித்துளசி சர்க்கரைக்கு நல்லதொரு மாற்று. சீனித்துளசியின் இலைகளை உலரவைத்து, பொடியாக்கி தேயிலைத்தூளுடன் சேர்த்து `டிப் டீ பேக்’ வடிவில் இப்போது விற்கப்படுகிறது. மதுரையைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் சீனித்துளசி டீ பேக்கோடு, சர்க்கரையையும் தயாரித்து விற்கிறார். சுகர் ஃப்ரீயைப்போல சீனித்துளசியை சர்க்கரைக்கு மாற்றாக 100 கிராம் பேக்கில் தருகிறார். அவரிடம் சீனித்துளசி குறித்துப் பேசினோம்…
சீனித்துளசி சர்க்கரை
“நமது கலாசாரத்தில் அறுசுவை உணவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், இன்றைக்கு சர்க்கரை நோயாளிகள் அறுசுவையையும் சுவைக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். எல்லோருக்கும் பிடித்த இனிப்புச் சுவையை சர்க்கரை நோயாளிகள் ருசிக்க முடியாது. பொதுவாகவே காலையில் நம் எல்லோருக்குமே காபி, டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், சர்க்கரை சேர்க்காத பானங்களை எப்படி அருந்த முடியும்? இதைக் கருத்தில்கொண்டுதான் சீனித்துளசி டீ தயாரிக்கிறேன். இது, வயிற்றுப் பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த நிவாரணி. உடல் எடையைக் குறைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.
கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிப்பதைப்போலத்தான் சீனித்துளசி செடியிலிருந்தும் சர்க்கரை எடுக்கப்படுகிறது. இதன் இலைகளை நன்றாக உலரவைத்து, அதன் மீது சூடான நீரைப் பாய்ச்சி, அதிலிருந்து ஸ்டீவியா என்ற பொருள் பிரித்தெடுக்கப்பட்டு, பொடியாக்கப்படுகிறது. பிறகு அதை அசாம் தேயிலையுடன் சேர்த்து ரெடிமேடு இன்ஸ்டன்ட் டீ பேக்காகக் கொடுக்கிறேன். வட மாநிலங்களில் சீனித்துளசியின் பயன்பாடு அதிகம். இப்போதுதான் இது நம்மிடையே புழக்கத்துக்கு வந்திருக்கிறது. உலக அளவில் Monk Fruit-க்கு அடுத்தபடியாக சீனித்துளசியில்தான் இயற்கையான சர்க்கரை இருக்கிறது. இவை இரண்டில் மட்டுமே ஜீரோ கலோரி, ஜீரோ கார்போஹைட்ரேட் உள்ளன.
ஊட்டச்சத்து விதியின் (Nutritional fact) அடிப்படையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் பிறகே விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறோம். இந்திய உணவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் `NABL (National Accreditation Board for Testing and Calibration Laboratories)’ என்ற ஆய்வுக்கூடம் சென்னை கிண்டியில் இருக்கிறது. அங்கே சீனித்துளசி சர்க்கரை கலந்த தேயிலை மற்றும் வெள்ளைச் சர்க்கரை கலந்த தேயிலை போன்றவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றின் ஆற்றல் மதிப்பு (Energy value), புரோட்டீன், மொத்த கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து போன்றவை எந்த அளவில் இருக்கின்றன என்று கணக்கிடப்பட்டது.
சீனித்துளசி டீ
அதன்படி சீனித்துளசியில் ஆற்றல் மதிப்பு 357.60 கிராம் (கலோரிகளில்), புரோட்டீன் 17.8 கிராம், கொழுப்பு BDL (DL01), கார்போஹைட்ரேட் 72.33 கிராம் (சீனித்துளசி சர்க்கரையில் உள்ள கார்போஹைட்ரேட்-0), நார்ச்சத்து 18.54 கிராம், சோடியம் 18 மில்லி கிராம் ஆக இருக்கும். அதேபோல் வெள்ளைச் சர்க்கரையில் ஆற்றல் மதிப்பு 366 கிராம் (கலோரிகளில்), புரோட்டீன் 16 கிராம், கொழுப்பு  BDL (DL0.1), கார்போஹைட்ரேட் 75.70 கிராம் (வெள்ளைச் சர்க்கரையில் உள்ள கார்போஹைட்ரேட் – 36.70), நார்ச்சத்து 16 கிராம், சோடியம் 123 மில்லி கிராம் ஆக இருந்தன.
ஆக, சீனித்துளசி சர்க்கரையில் கார்போஹைட்ரேட்டின் அளவு ஜீரோ அளவில் இருக்கிறது. இதனால் சர்க்கரையின் அளவில் எந்தப் பிரச்னையும் இருக்காது. மாறாக வெள்ளைச் சர்க்கரையில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், உணவு எளிதில் செரிமானமாகாது. ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரித்து, சர்க்கரைநோய் பாதிப்பு அதிகமாகும், கொழுப்பு உருவாகும். இதனால், உடல் பருமன், இதயநோய் பாதிப்புகள் ஏற்படும். இதேபோல், வெள்ளைச் சர்க்கரையில் சோடியத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இது சர்க்கரைநோயை மட்டுமல்லாமல் மற்ற நோய்கள் வருவதற்கும் காரணமாகிவிடும்” என்கிறார் முத்துக்கிருஷ்ணன்.
சீனித்துளசி சர்க்கரையை சுகர்ஃப்ரீயைப் (Sugarfree) போலவே 100 கிராம் பேக்கில் தருகிறார்;
சீனித்துளசியில் பிஸ்கெட், இனிப்பு வகைகளைத் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாகவும் சொன்னார் முத்துக்கிருஷ்ணன்.

Saturday, 28 July 2018

மதிய பிரதேசத்தில் ஒரு நெல் ஜெயராமன்!


ன்னமழகி, ஒட்டடையான், கருங்குறுவை, நவரை, நல்லுண்டை என சுமார் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட பாரம்பர்ய நெல் வகைகளைப் பயிர் செய்தவன் தமிழன். அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் தற்போது பலர் ஈடுபட்டு வருகிறார்கள். ‘நெல்’ ஜெயராமன் போன்றோர்களின் சீரிய முயற்சியால் குறிப்பிடத்தக்க சில பாரம்பர்ய நெல் வகைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. தாகமிகு விதைகளின் இயல்பை தற்போது அனைவரும் உணர ஆரம்பித்திருக்கும் சூழலில் பாரம்பர்ய நெல் வகைகளின் தேவை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.
மத்தியபிரதேசத்தில் சட்ணா மாவட்டத்தில் இருக்கும் சிறிய கிராமம்தான் மேஹார். அங்கு வசிக்கும் 72வயதான விவசாயி பாபுலால், பாரம்பர்ய நெல் விதைகளைச் சேகரித்து பாதுகாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இதுவரை 110 வகையான பாரம்பர்ய நெல்வகைகளைச் சேகரித்தது மட்டுமல்லாமல், அவற்றை தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு அவற்றை பெருக்கி விவசாயிகளுக்கு வழங்கிவருகிறார்.
நெல்
விவசாய குடும்பத்தில் பிறந்த பாபுலாலுக்கு சிறுவயதில் இருந்தே விவசாயத்தின் மீது ஆர்வமும் ஆசையும் அதிகம். ஆனால், அவரது தந்தைக்கோ, மகன் நன்றாக படித்து நல்ல வேலைக்குச் செல்லவேண்டும் என்று ஆசை. அதனால், பாபுலாலை அருகில் இருக்கும் நகரத்தில் தங்கவைத்து படிக்கவைத்தார். உள்ளூர் மொழியான பஹீலி மொழிதான் அப்பகுதியில் பேசுவார்கள். அந்த மொழியில் கவிதைகள், பாடல்கள் எழுதுவதில் பாபுலாலை அடித்துக்கொள்ள அங்கு ஆள் இல்லை என்றே சொல்லலாம். அதனால், கிராமத்திற்கு பாபுலால் வந்தாலே அனைவரும் அவரது வீட்டின் முன் வந்து ஆஜராகிவிடுவார்கள். ஆனால், பாபுலாலோ,  வீட்டில் இருப்பதைவிட தன் தந்தையுடன் வயலில் இருக்கும் நேரம்தான் அதிகமாக இருக்கும். தனது கவித்திறமையால் பஹீலி மொழியில் புத்தகங்கள் எழுதினார். மேலும் நாட்டுப்புறக் கதைகளையும் எழுதி புத்தகங்களாக வெளியிட்டார் பாபுலால். அப்பகுதியில் படித்த, திறமையான நபராக அறியப்பட பாபுலாலுக்கு சில வாய்ப்புகள் தேடி வந்தன. அதில் ஒன்றுதான் ’ஆதிவாசி லோக் காலா அகாதமி’யில் இணையும் வாய்ப்பு. மலைவாழ் மக்களின் பாரம்பர்யம், கலாசாரம், பழக்கவழக்கங்கள் பற்றி ஆவணம் செய்யும் பணி பாபுலாலுக்குக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே பாடல்கள், கதைகள் மூலம் மலைவாழ் மக்களின் பாரம்பர்யத்தை பதிவுசெய்திருந்த பாபுலாலுக்கு அந்த பணி எளிமையாக இருந்தது. மேலும் அப்பணி அவருக்குள் சில மாற்றத்தைக் கொடுத்தது. பாரம்பர்ய உணவு முறைகள் பற்றி சிந்திக்கத்தூண்டியது.
நெல்
வருடம் 2005. நாட்டுப்புறப் பாடல்கள், கதைகளில் வரும் அரிசி வகைகளைப் பற்றிய தகவல்கள் திரட்ட ஆரம்பித்தார். இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பாரம்பர்ய அரிசிவகைகள் இருப்பதைக் கண்டறிந்தார். அவற்றில் பெரும்பாலான அரிசி வகையை, விவசாயிகள் தற்போது பயிர் செய்வதில்லை என்று தெரிந்துகொண்டார். அவற்றை தேடி பயணம் மேற்கொண்டார். சுமார் 110 வகையான பாரம்பர்ய நெல் விதைகளைச் சேகரித்தார். அவற்றில் சில, அழிவின் விளிம்பில் இருந்தன. உடனே தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் அவற்றை பயிர்செய்து விதைகளைப் பெருக்கினார். அழிவின் விளிம்பில் இருந்து அவற்றை காத்தார் பாபுலால்.
நெல்
எந்த நிலத்திலும் வளரக்கூடிய, உரம், பூச்சிமருந்து, அதிகத் தண்ணீர் என எதுவும் தேவைப்படாத பாரம்பர்ய நெல்வகைகள் அவை. உரம் வாங்க காசு இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் விவசாயிகளின் நிலை கண்டு, விவசாயிகளுக்குப் பாரம்பர்ய நெல் குறித்து விழிப்புஉணர்வு செய்தார். ஆரம்பம் முதலே, பாபுலால் மீது பாசமும் மரியாதையும் வைத்திருக்கும் மக்களுக்குத் தன் கருத்தை எளிமையாகக் கொண்டு சேர்த்தார் பாபுலால். விவசாயிகள் சிலருக்கு அவற்றின் தேவை புரிந்ததால், பாபுலாலிடம் விதைகளை வாங்கிக்கொண்டனர். அவற்றை பயிர் செய்து நல்ல லாபம் அடைந்தார்கள். இதனால் சுற்றியுள்ள கிராம மக்களும் பாபுலாலிடம் விதை வாங்கிச்செல்கிறார்கள். மக்களின் தேவையை உணர்ந்த பாபுலால், சில அரசு உதவிபெறும் அமைப்புகளுடன் இணைந்து விதை வங்கியை அப்பகுதியில் உருவாக்கியிருக்கிறார்.
நெல்
இவரின் பாரம்பர்ய மீட்டெடுப்பு நடவடிக்கையைப் பார்த்து ஆர்வமடைந்த  மத்தியப்பிரதேச பல்லுயிர் அமைப்பானது, மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி, பாரம்பர்ய காய், கனிகளை மீட்டெடுத்திருக்கிறது. இதுவரை சுமார் 1600 வகையான பாரம்பர்ய காய்கறிகள், பழங்கள், மருத்துவத் தாவரங்களை மீட்டு பாதுகாத்துப் பெருக்கியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.!
நம் பாரம்பர்ய நெல்லை பயிர் செய்யுங்கள். அதன் மூலம் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குங்கள். அவர்கள் கையிலும் பாரம்பர்ய விதைகளைக் கொடுத்துச்செல்லுங்கள்’ என்பதே பாபுலாலின் கொள்கை.

எலுமிச்சை சாகுபடியில் அசத்தும் விவசாயி!


கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கும் ராமநாதபுரத்தில் விவசாயத்தில் சாதிப்பது சாதாரணம் அல்ல. “பொன்னு விளையும் பூமியில் ராமநாதபுரமும் ஒன்று தான்” என, தங்களின் விவசாய தொழில்நுட்பத்தை புகுத்தி சாதனை படைத்து வரும் பஞ்சாப் விவசாயிகளின் வரிசையில், சொந்த மண்ணை சேர்ந்த ராமநாதபுரம் பாண்டியூர் விவசாயி பழனியும் ஒருவர்.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே பாண்டியூர், உச்சிப்புளி அருகே இருமேனி ஆகிய பகுதிகளில் மட்டுமே உவர்ப்பு சுவை கலக்காத தண்ணீர் கிடைக்கிறது. இவ்விரண்டு கிராமங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விலைக்கு விற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக பாண்டியூர், இருமேனி கிராமங்கள் உள்ளன.
பாண்டியூர் விவசாயி பழனி, தனது தோட்டத்தில் வீரிய ஒட்டு ரக எலுமிச்சை மரங்கள் 4,000 எண்ணிக்கையில் வளர்த்து வருகிறார். தவிர 800 தென்னை மரங்கள், 750 உயர் ரக மா மரங்கள் என மொத்தம் 70 ஏக்கர் நிலம் பசுமை போர்வை போர்த்தியது போல் மிடுக்காக காட்சியளிக்கிறது.
எலுமிச்சை, தென்னை, மா விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்டி வருகிறார். இதன் மூலம் ஏராளமானோருக்கு நேரடியாகவும், மறை முகமாகவும் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.
முன்னோடி விவசாயி பழனி கூறியதாவது:
  • ராமநாதபுரம் மாவட்டம் புளியங்குடியில் ‘வாண் பதின்’ முறையில் வீரிய ஒட்டு ரக எலுமிச்சை கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பின் அவற்றை ஆந்திராவுக்கு எடுத்துச் சென்று எலுமிச்சை கன்றுகளாக வளர்க்கப்படுகிறது.
  • கன்று ஒன்றுக்கு 135 ரூபாய் செலுத்தி 4,000 கன்றுகளை மூன்று ஆண்டுகளுக்கு முன் பாண்டியூர் தோட்டத்தில் 40 ஏக்கரில் நடவு செய்தேன்.
  • கால்நடை எரு, மக்கிய குப்பை அடியுரமாக பயன்படுத்தினேன். சொட்டு நீர்ப்பாசன முறையில் கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் ஆண்டில் இருந்து காய்கள் கிடைக்கிறது.
  • எலுமிச்சம் பழம் நன்கு பருத்துள்ளது. ஒரு கிலோவிற்கு 16 பழங்கள் உள்ளன. இளம் மஞ்சள் நிறத்தில் பழம் பளபளக்கிறது.
  • கோடை சீசனை முன்னிட்டு எலுமிச்சைக்கு கிராக்கி அதிகம். கிலோ 60 ரூபாய் வரை விலை போகிறது.
  • மரம் ஒன்றில் ஆண்டுக்கு 400 முதல் 600 பழங்கள் கிடைக்கின்றன. 70 சதவீதம் பழுத்த எலுமிச்சையை தினமும் பறித்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கிறோம்.
    வியாபாரிகள் பலர் தோட்டத்துக்கே வந்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர். அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.
  • 20 ஆண்டுகள் வரை காய்ப்பு இருக்கும். சீசனை பொறுத்து லாபம் அதிகரிக்கும்.
  • எலுமிச்சை விவசாயத்தில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பராமரிப்பு செலவும் இல்லை. பூச்சிக்கொல்லி மருந்தும் தேவை இல்லை.
  • எலுமிச்சை லாபம் மிக்க விவசாயமாக உள்ளது. சொட்டு நீர்ப்பாசன முறை என்பதால் தண்ணீர் செலவும் குறைவு. இந்த விவசாயம் மன நிறைவை தருகிறது, என்றார்.
தொடர்புக்கு 09442045588 .
– கா.சுப்பிரமணியன், மதுரை.
நன்றி: தினமலர்

Tuesday, 24 July 2018

வெண்டை சாகுபடி செய்யும் முறை



வெண்டைக்கு வைகாசி, ஆனி, ஆடி ஆகிய பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த 75 சென்ட் நிலத்தைச் சட்டிக்கலப்பையால் உழுது, இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழவு செய்து 150 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி உயரம் என்ற அளவில் பாத்தி எடுக்க வேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொறுத்து நீளத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
15 டன் தொழுவுரம், 400 கிலோ மண்புழு உரம், 400 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, தலா 1 கிலோ பாஸ்போபாக்டீரியா, அசோஸ்பைரில்லம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பாத்திகளின் மீது பரப்ப வேண்டும். பாத்திகளில் சொட்டுநீர்க் குழாய்களைப் பொருத்தி, பாத்திகளின் மீது ‘பாலிதீன் மல்ச்சிங் ஷீட்’ டை விரிக்க வேண்டும். மல்ச்சிங் ஷீட் விரிப்பதால் நிலத்தில் களைகள் வராது. நீர் ஆவியாவது தடுக்கப்படும். இவற்றை இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் சாகுபடி முடிந்தவுடன் சுருட்டி எடுத்து வைத்துவிடலாம்.
மல்ச்சிங் ஷீட்டின் இரு ஓரங்களிலும் ஓர் அடி இடைவெளியில் துளை ஏற்படுத்தி 4 அங்குல ஆழத்துக்குக் குழி எடுக்க வேண்டும். துளைகள் ‘ஜிக்ஜாக்’ காக முக்கோண நடவு முறையில் இருக்க வேண்டும். இரண்டு நாட்கள் தொடர்ந்து பாசனம் செய்து பாத்திகள் நன்கு ஈரமானவுடன், குழிக்கு ஒரு விதை வீதம் ஊன்றித் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
விதைத்த 5-ம் நாளில் முளைப்பு எடுக்கும். 15-ம் நாளில் அரை அடி உயரம் வளர்ந்துவிடும். அந்த நேரத்தில் செடிகளைச் சுற்றி எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். இவை, இலைகள், தண்டுகளில் துளைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. எறும்புகள் வந்தால், 150 கிலோ வேப்பம் பிண்ணாக்கில் 6 லிட்டர் வேப்பெண்ணெய் கலந்து பிசைந்து, ஒவ்வொரு செடிக்கருகிலும் கைப்பிடி அளவு தூவினால் எறும்புகள் ஓடிவிடும். செடிகள் 35-ம் நாளில் பூத்து 40-ம் நாளுக்கு மேல் காய்க்கத் தொடங்கும். 45-ம் நாளில் இருந்து 140-ம் நாள் வரை காய்களைப் பறிக்கலாம்.
நன்றி
பசுமை விகடன்

Tuesday, 10 July 2018

இயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்


வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது. ரசாயன உரங்களால் வயல்கள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.

எனவே ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தவிர்த்து,  இயற்கை வழி வேளாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உருவாகி உள்ளது.
நீர் வளங்களைப் பாதுகாத்து மாசற்ற நீரைத் தக்க வைத்தல், இயற்கைச் சூழல் மாசுபடாமல் காத்தல், உணவு நஞ்சாவதைத் தடுத்து உயிரினங்களைப் பாதுகாத்தல், மண்ணின் மலட்டுத் தன்மையை நீக்கி பொன் விளையும் பூமியாக மாற்றுதல், சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் கேடு ஏற்டாமல் தடுத்து, ரசாயன உரங்களைத் தவிர்த்து சாகுபடி செய்வதே இயற்கை வளாண்மை ஆகும்.
இயற்கை வழி வேளாண்மைக்கு மிகவும் அவசியமான இயற்கை உரங்கள் வ கையையும், அவற்றைத் தயாரிக்கும் முறையையும் காண்போம்.
கம்போஸ்ட் உரம்: பண்ணைக் கழிவுகளில் இருந்தும், இலை, சருகு மற்றும் குப்பைகளில் இருந்தும் புளுரோட்டஸ் என்னும் காளான் வித்துகளைப் பயன்படுத்தி, ஒரு மாதத்துக்குள் மக்க வைத்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது.
தென்னை நார் கம்போஸ்ட் உரம்: தென்னை நார்களில் 50 சதவீதத்திற்கு மேல் லிக்னின் மற்றும் செல்லுலோஸ் உள்ளது. தென்னை நார்களுடன் புளுரோட்டஸ் காளான் வகையைச் சேர்த்து மக்க வைத்து இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.
தொழு உரம்: இரு மாடுகள் வைத்திருக்கும் விவசாயி, ஓராண்டில் 6 டன் தொழு உரம் தயாரிக்கலாம். மாட்டுச் சாணத்தை விட மாட்டின் சிறுநீரில்தான் தழைச்சத்து அதிகம் உள்ளது. எனவே மாட்டுக் கொட்டகையில் மண் பரப்பி, மாடுகள் தின்று  கழித்த வைக்கோலை அதில் பரப்பி, அவற்றில் மாட்டை சிறுநீர் கழிக்கும்படி செய்து, அதைச் சேகரித்து மக்க வைத்து இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.
பிண்ணாக்கு உரம்: ஆமணக்கு, நிலக்கடலை, எள், பருத்தி, தேங்காய், புங்கன், இலுப்பை, வேப்பங்கொட்டை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்டும் பிண்ணாக்குகளைக் கொண்டு இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.
பசுந்தாள் உரம்: தக்கைப் பூண்டு, சணப்பு, கொழுஞ்சி, மணிலா, அகத்தி,நரிப்பயறு முதலியவற்றைப் பயன்படுத்தியும், மரம், செடி, கொடி ஆகியவற்றின் தழை களைப் பயன்படுத்தியும் இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரம் தழைச் சத்தாகவும், மக்குச் சத்தாகவும் பயன் ஆகி, நுண்ணுயிர்களைச் செயல் திறன் பெறச் செய்கிறது.
மண்புழு உரம்: ஆடு, மாடு கழிவுகள் மற்றும் வீடு, தோட்டக் கழிவுகளை பள்ளத்தில் குவித்து, அதில் மண் புழுக்களை இட்டு மக்கச்செய்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை உரத்தால் பயிர்களுக்கு தழை, மணி, சாம்பல், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், கந்தகம் போன்ற உலோகச் சத்துகளும் கிடைக்கின்றன. பயிர் சாகுபடி வரையிலும் இந்த சத்துகள் பயன்படுகின்றன. இதுதவிர பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஜிம்ரலின், சைட்டோகனிஸ் ஆகிய வளர்ச்சி ஊக்கிகளும் கிடைக்கின்றன.

Monday, 9 July 2018

இயற்கை முறையில் துவரை சாகுபடி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiniJigU3iI6CAzxurnOcHyfLtZ07PQAjub8j-eaAqIwFOB6U1wx-ANPIYkF3CpsJ6ntRkDiSWB4y8JXAfiq339BPHw1NfZu3Bvl47LuZTaHSZF05aWg4DJR78qB_FrfkuIQvY_GSq-2MM/?imgmax=800

தமிழகத்தில் பயறு சாகுபடி வகைகளில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப் பயிறு, துவரை, கொண்டைக்கடலை ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இதில் உளுந்து, பாசிப்பயிறு போன்றவை குறைந்த நாள்களில் விளைச்சல் பெறுவதால், இதன் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. துவரைப் பயறு விளைச்சலுக்கு 105 முதல் 200 நாள்கள் வரை உள்ளதால், இதன் உற்பத்தித் திறன் அதிகமாகும். மேலும், உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் தொழில்நுட்ப நடவு முறையில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.
தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் ச. கண்ணையா கூறியது:
துவரை சாகுபடியில் நடவுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் போதிய பயிர் எண்ணிக்கையைப் பராமரிப்பதுடன், குறைந்த விதையளவுடன் 1 ஏக்கருக்கு 1 கிலோ விதை போதுமானது. தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்துவதால் இறவையில் 1 ஏக்கருக்கு 500 முதல் 600 கிலோவும், மானாவாரியில் 1 ஏக்கருக்கு 300 முதல் 400 கிலோ வரை கூடுதல் மகசூலும் கிடைக்கும்.
துவரை நடவு செய்வதற்குத் தேவையான நாற்றாங்காலை குழித்தட்டு மற்றும் பாலித்தீன் பைகளில் வளர்த்து நடவு செய்யலாம். பெருங்கரை போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இதுபோன்ற நாற்றாங்கால் அமைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குழித்தட்டு நாற்றங்கால் முறையில் 200 காஜ் கருப்பு நிற குழித்தட்டுகள் அமைத்து, அக் குழிகளில் மக்கிய தென்னை நார்க் கழிவுகள் மற்றும் மணல் பயன்படுத்தப்படுகிறது. தட்டில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி வேர்கள் அழுகி விடாமல் இருந்திட 3 முதல் 4 துளைகள் போட வேண்டும். 15 நாள் வளர்ந்துள்ள நாற்றுகளை நடவு செய்திடலாம்.
இக் குழித் தட்டுகளில் 90 சதவீதம் பரப்பியுள்ள தென்னைநார் மற்றும் மணலில் குழி ஒன்றில் இரண்டு விதைகளை ஊன்ற வேண்டும். பூஞ்சாள நோய் தாக்குதலிலிருந்து நாற்றுகளைப் பாதுகாத்திட 1 கிலோ விதையுடன் 10 கிராம் சூடோமோனாஸ் கலவையுடன் கலந்து விதைக்க வேண்டும். முளைத்த 10ஆம் நாளில் வீரியமான நாற்றை மட்டும் வைத்துவிட்டு, வலுவிழந்த நாற்றினை நீக்கி, ஒரு குழியில் ஒரு நாற்று மட்டும் இருக்குமாறு வைத்து பின்னர் நடவு செய்ய வேண்டும்.
நடவு முறை: நடவு செய்வதற்கு 1 வாரத்திற்கு முன்பு தொழு உரம் இட்டு நடவு வயலைத் தயார் செய்திட வேண்டும். வரிசைக்கு வரிசை 5 அடி, செடிக்கு செடி 3 அடி இடைவெளியில் நாற்றுகள் நடுவதற்கு ஏதுவாக சிறு குழிகள் எடுக்க வேண்டும். 15 நாள்கள் வளர்ந்துள்ள நாற்றுகளை அந்த குழிகளில் நடவு செய்ய வேண்டும்.
ஊடுபயிர் சாகுபடி: வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளி உள்ளதால், காலியாக உள்ள பரப்பில் ஊடுபயிராக உளுந்து, பாசிப் பயறு மற்றும் கடலை போன்ற பயிர்களைப் பயிர் செய்யலாம். இதனால் கூடுதல் மகசூல் பெற்று அதிக லாபம் பெறலாம்.
களை மற்றும் நீர் மேலாண்மை: நடவு செய்த 20-ஆம் நாளில் கைக் களை எடுத்து களைகளைக் கட்டுப்படுத்தலாம். தண்ணீர் தேங்கினாலும், பற்றாக்குறை ஏற்பட்டாலும் பயிரின் வளர்ச்சி பாதித்து, மகசூல் இழப்பு ஏற்படும். இதனால் நடவின்போதும், பூக்கள் மலரும்போதும், காய்கள் உருவாகும்போதும் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம்.
நடவு செய்த 30ஆம் நாள் ஜீவாமிர்த கரைசல் தர வேண்டும். பூக்கும் தருணத்தில் பஞ்சகவ்ய கரைசலை இலை வழியாக 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இதனால் அதிக எண்ணிக்கையில் காய்கள் உருவாகும்.
துவரையின் நுனி மேல் நோக்கி வளர்ந்து கொண்டே செல்லும். இதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பக்கக் கிளைகள் தோன்றி, அதிக காய்கள் உருவாகும்.
எனவே, நடவு செய்த 20 முதல் 30ஆம் நாள் ஒருமுறையும், 50ஆம் நாள் இரண்டாவது முறையும் நுனியைக் கிள்ளிவிடவது அவசியம்.
பயிர் பாதுகாப்பு முறைகள்: சரியான நேரத்தில் மண் அணைத்துக் கொடுக்க வேண்டும். பூச்சிகள் ஏதேனும் தென்பட்டால், வேப்பம் கொட்டை கரைசல், பூண்டு மற்றும் நொச்சி கரைசல் போன்றவற்றை வேளாண் துறையினரின் ஆலோசனைப்படி தெளிக்க வேண்டும்.

Sunday, 1 July 2018

இயற்கை முறையில் கத்திரி சாகுபடி செய்யும் இளைஞர்

கத்திரிக்காய் க்கான பட முடிவு


  • லாப நோக்கில் வீரிய ஒட்டுரக விதைகளையும், செயற்கை உரம் மற்றும் பூச்சி மருந்து முதலானவற்றைப் பயன்படுத்தி தற்போது காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதை உண்பவருக்கு, பக்க விளைவுகள் ஏற்படும் நிலையுள்ளது. இதனால், இயற்கை முறையில் கத்திரி சாகுபடி செய்துவருகிறேன்.
  • செவந்தம்பட்டி கத்தரி: பாரம்பரிய கத்திரி ரகங்களுள் ஒன்றான செவந்தம்பட்டி ரகத்தில் 30 நாளான நாற்றுகளை காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்திலிருந்து வாங்கிவந்து தோட்டத்தில்  நிகழாண்டு நடவு செய்தேன்.
  • இதற்காக  60 நாள்களுக்கு முன்னதாகவே நிலத்தை உழுது அதில் பசுந்தாள் உரங்களுள் ஒன்றான சணப்பு விதைகளை விதைத்து, 45 நாள்களில் மண்ணுடன் உழவு செய்தோம்.  இதனால், மண்ணில் பல ஆண்டுகளாக உரம் மற்றும் ரசாயன பூச்சி மருந்துகளால் ஏற்பட்டிருந்த கார அமில தன்மைகளை இது மாற்றியது. மேலும் மண்ணுக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளையும் கொடுப்பதனால் அடுத்தடுத்த பருவ சாகுபடி நல்ல மகசூலை தரும்.
  • இதன்பிறகு மண்ணை இரண்டுமுறை நன்கு உழவு செய்து மண்ணை காயவைத்து அதன்பிறகு 5 அடி பட்டத்தின் அகலமும், 4 அடி செடிக்கு செடி அகலமும் வைத்து குழிவெட்டி, அதில் நன்கு மக்கிய தொழு உரங்களை குழிகளில் இட்டு அதன் பிறகு அதில் தேர்வு செய்த நாற்றுகளை நடவு செய்தேன்.
  • பின்னர் மூன்று நாள்கள் காலை மற்றும் மூன்று நாள்கள் மாலையிலும் தண்ணீர் ஊற்றி பின்னர் பருவத்தில் கொத்தி, பார்கள் அமைத்து, முதல் பூச்சி விரட்டியாக 3 எ கரைசல் எனப்படும் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் முதலியவற்றை நன்கு இடித்து அதில் பசுவின் கோமியத்தை கலந்து தெளித்தோம்.  மேல் உரமாக ஈயம் கரைசலை பயன்படுத்தினோம்.
  • இதன் பிறகு செடிகளுக்கு இலைவழி உரமாக பஞ்சகவ்யம், பூச்சி விரட்டிகளாக 3 ஏ கரைசல், 7 இலை கரைசல் முதலியவற்றை பயன்படுத்தினோம். தற்போது 90 நாள்கள் கடந்த நிலையில் ஏறக்குறைய 6 அடி உயரம் வளர்ந்து செடி நல்ல மகசூலை தந்துகொண்டிருக்கிறது. சுமார் 20 செண்ட் நிலப் பரப்பில் பயிர் செய்திருக்கும் கத்திரி கடந்த 60 நாள்களில் 1,265 கிலோ பறிக்கப்பட்டுள்ளன.
  • இந்த செடிகளில் மேலும் 8, 9 மாதங்கள் வரை காய்ப்பு இருக்கும். இது இயற்கை முறையிலானது என்பதால் இந்த மகசூல் தொடரும். நல்ல லாபம் கிடைப்பது தெரிகிறது. உற்பத்தி அனைத்தும் காரைக்கால் பகுதி சந்தைக்கே விற்பனைக்காக அனுப்பப்படுகிறது என்றார்.
நன்றி: தினமணி

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சீனித்துளசி!

சீனித்துளசி… சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரம்! இந்த மூலிகைக்கு `மிட்டாய் இலை’ (Candy Leaf), `இனிப்பு இலை’ (Sweet Leaf), `சர்...